

மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவையில் உள்ள ஈஷா யோகா மையம்த்தில் 32-வது மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அவரை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். இதைத்தொடர்ந்து தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத வழிபாட்டில் பங்கேற்ற அவர், ஆதியோகி சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த மகா சிவராத்திரி விழா மேடைக்கு வந்தார். அங்கு இருந்த யோகேஸ்வர லிங்கத்திற்கு தீர்த்தத்தை ஊற்றி வழிபட்டார்.
மகா சிவராத்திரி யாக வேள்வியை நெருப்பு மூட்டி விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:“சிவன் தான் தொடக்கம். அவர் தனித்துவமானவர். அனைத்து வேறுபாடுகளையும் கடந்தவர். சிவனை நம்புவோர், அவர் குடிகொண்டுள்ள வெள்ளியங்கிரியை தென் கைலாயமாகக் காண்கிறார்கள்.
இந்த இடம் சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ஆதியோகி சிலைக்கு வந்திருப்பது நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக பார்க்கிறேன். இங்கு நான் விருந்தாளியாக வரவில்லை; ஆன்மிகத்தின் பலனை பெற வந்துள்ளேன். சிவன் இருக்கும் இடத்தில் அனைத்தும் இருக்கும். இது நமது கலாசாரத்தின் மிகப்பெரிய பலம். மகா சிவராத்திரி, சிவனையும் சக்தியையும் ஒருசேர வழிபடக் கிடைக்கும் தினம். சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்பதையே இது எடுத்துக்கூறுகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.