சட்டசபையில் பிப்ரவரி 2-வது வாரம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
சட்டசபையில் பிப்ரவரி 2-வது வாரம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
Published on

தமிழக சட்டசபை கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். ஆனாலும், அவரது உரை தமிழில் வாசிக்கப்பட்டு அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, 22-ந் தேதி முதல் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இடைக்கால பட்ஜெட் தாக்கல்:

இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த முறை தி.மு.க. அரசால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.

பிப்ரவரி மாதம் 2-வது வாரம் கடைசியில் (13-ந் தேதி), அல்லது 3-வது வாரம் தொடக்கத்தில் (16-ந் தேதி) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளும் அந்த நேரத்தில் தமிழகம் வந்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதால், அவர்களின் வருகையை பொறுத்து தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி பட்ஜெட் இது என்பதால், பொதுமக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com