"முடித்தே ஆக வேண்டும்.." - த.வெ.க நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு


முடித்தே ஆக வேண்டும்.. - த.வெ.க நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு
x

கோப்புப்படம்

நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது.

அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்தகால தேர்தலை போலவே தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறது.

நடிகர் விஜய்யின் தவெக தேர்தல் களத்திற்கு புதிது. திமுக-பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கடந்த செயற்குழு கூட்டத்தில் விஜய் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அப்படியென்றால் அதிமுகவுடன் விஜய் கட்சி கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதால், அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய்யின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்பிடி கொள்கை ஆகியவற்றால் 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த சூழலில் தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தவெக 2-ம் மாநாடு மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார். முன்னதாக நடிகர் விஜய், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார்.

இதனிடையே 'மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்' என வீடு வீடாக சென்று த.வெ.க நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பிரசாரத்தைத் துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு த.வெ.க நிர்வாகிகள் நேரில் செல்ல வேண்டும் என்றும், 2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும் என்றும்

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story