கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; கோர்ட்டில் முறையிட த.வெ.க. முடிவு


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; கோர்ட்டில் முறையிட த.வெ.க. முடிவு
x

சென்னை ஐகோர்ட்டில் முறையிட த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

இதற்கிடையில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் கரூரில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார். அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது விஜய் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். இதற்கிடையில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து த.வெ.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய உத்தரவிட கூறி சென்னை ஐகோர்ட்டில் முறையிட த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story