தகைசால் தமிழர் விருதுக்கு கே.எம்.காதர் மொய்தீன் தேர்வு  - முத்தரசன் வாழ்த்து


தகைசால் தமிழர் விருதுக்கு கே.எம்.காதர் மொய்தீன் தேர்வு  -  முத்தரசன் வாழ்த்து
x

தமிழர் விருதுக்கு தேர்வு செய்த, தேர்வு குழுவின் நடவடிக்கை மிகப் பொருத்தமானது. பாராட்டுக்குரியது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது-

தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர்" விருதுக்கு, இந்தாண்டு (2025) மூத்த அரசியல் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டிருப்பது பொருத்தமானது. மகிழ்ச்சி அளிக்கிறது. கே.எம்.காதர் மொய்தீன் மாணவப் பருவத்தில் இருந்தே சமூக நல்லிணக்கம் பேணி வருபவர். கண்ணியம் காத்த தலைவர் காயிதே மில்லத் வழி நின்று பொதுவாழ்வை மேற்கொண்டு வருபவர்.

இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பொறுப்பில் பணியாற்றி வருபவர். மனித நேயம், சகோதரத்துவம், சமூக இணக்கம் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். "மணிச்சுடர்" செய்தி பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

மத அடிப்படைவாத சக்திகளை எதிர்த்து போராடி வருவதுடன், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் ஜனநாயக போராட்டத்தில் மதச்சார்பற்ற கொள்கையை வலுச் சேர்த்து வருபவர். இப்படி நற்பணியாற்றி வருபவரை தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்த, தேர்வு குழுவின் நடவடிக்கை மிகப் பொருத்தமானது. பாராட்டுக்குரியது.

விருது பெறும் தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது..

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story