நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி வைத்தார் கே.என்.நேரு

இப்பூங்கா சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை வளம் நிறைந்த பூங்காவாகும்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று (19.09.2025) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123க்குட்பட்ட மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான திட்ட வரைபடத்தினைப் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள நாகேஸ்வரராவ் பூங்கா 20.10.1949 அன்று அப்போதைய மதராஸ் மாகாணத்தின் பிரதமர் பி.எஸ்.குமாரசாமிராஜாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பூங்காவானது அப்பகுதியில் வசித்த சுதந்திரப் போராட்ட வீரரான நாகேஸ்வர ராவ் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை வளம் நிறைந்த பூங்காவாகும்.
இப்பூங்காவின் மொத்த பரப்பளவு சுமார் 4 ஏக்கர் (16,929.17 சதுர மீட்டர்) ஆகும். இதில் சமூக அரங்கு (Community Pavilion), பேட்மிண்டன் மைதானம், வெளிப்புற உடற்பயிற்சி மையம் (Outdoor Gym), அமர்வு இடம், நீர்நிலை (Water body) கட்டமைப்பு, பசுமைப் பரப்பு, பேவர் பிளாக் பதித்த நடைபாதை, குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, நுழைவு வாயில் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், லஸ் சர்ச் சாலை (தெற்கு) மற்றும் லஸ் சர்ச் சாலை (வடக்கு) ஆகிய இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.
இப்பூங்காவில் தற்போது “பசுமைத் தடம் (Green Footprint)” என்ற கருத்தை மையமாகக் கொண்டு மேம்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் நோக்கம் இப்பூங்காவினை மேலும் பசுமை நிறைந்த மற்றும் நிலைத்தன்மை கொண்ட, அழகிய வடிவமைப்புடன் பாரம்பரிய அழகை பேணும்படியாக மேம்படுத்துதல் ஆகும்.
இந்த மேம்பாட்டுப் பணிகளில் அழகிய வடிவமைப்புடன் கூடிய நுழைவு வளாகம் (Entrance Plaze), கலந்துரையாடும் இடம் (Interactive Space), பூப்பந்து மைதானம் (Badminton Court), குழந்தைகள் விளையாடும் பகுதி (Kids Play Area), குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், நீரூற்றுடன் கூடிய இருக்கைகள் (Fountain with Seatings), மரங்களைச் சுற்றிலும் அமரும் இடம் (Tree Seatings), அழகிய வடிவமைப்புடன் கூடிய அமரும் இடம் (Gazebo), டென்சைல் கூரையுடன் கூடிய அமரும் இடம் (Tensile Seating), நீர்நிலை கட்டமைப்பு (Water Body (Swale)), ரிப்பன் வடிவில் அமரும் இடம் (Ribbon Sitting), பசுமைப் பரப்பு (Green Space), செயற்கை நீரூற்று (Fountain), ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கைப்பிடிகள் அமைத்தல், தண்ணீர்தெளிப்பு (Sprinkler) ஏற்பாடுகள், குடிநீர் மற்றும் மின்வசதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சுற்றுச்சுவர் அமைத்தல், பெவிலியன் கூரை அமைப்பு, அறிவிப்புப் பலகைகள், ஒலி அமைப்பு (PA System), ஒப்பனை அறை (Toilets) மற்றும் பாதுகாவலர் அறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் இப்பகுதியில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இப்பூங்காவினைப் பயன்படுத்தி பெரிதும் பயனடைவார்கள்.
இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மாமன்ற உறுப்பினர் மோ.சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






