அய்யா வைகுண்டர் வழி நடந்து மனிதம் காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அய்யா வைகுண்டர் வழி நடந்து மனிதம் காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 March 2025 11:23 AM IST (Updated: 4 March 2025 11:25 AM IST)
t-max-icont-min-icon

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. உன்னில் இறைவனைப் பார் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. அய்யா வைகுண்டரை பின்பற்றுபவர்கள் நெற்றியில் நீண்ட நாமமும், தலையில் தலைப்பாகையும் கட்டுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள். "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே! என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story