காதல் விவகாரம்: மயிலாடுதுறையில் ஆணவப் படுகொலை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


காதல் விவகாரம்: மயிலாடுதுறையில் ஆணவப் படுகொலை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
x

கடந்த 15 ஆம் தேதி இரவு வைரமுத்து வேலைக்கு சென்று, வீடு திரும்பும் போது கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரமுத்து - மாலினி. இவர்கள் இருவரும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் நேசித்து வந்துள்ளனர். இவரது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர். இருவரும் ஒரே சமூக பிரிவைச் சேர்ந்தவர்கள் எனினும், மாலினியின் தாயார் விஜயா சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.

அவர், தனது சுயசாதியில் தான் மாலினிக்கு திருமணம் செய்ய வேண்டும் என பிடிவாதம் காட்டியுள்ளார். ஆனால், மாலினி பத்தாண்டுகளாக நேசித்து வந்த வைரமுத்துவுடன் தான் வாழ முடியும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத விஜயாவும், அவரது மகன்கள் குகன், குணால் ஆகியோரும் சதி செய்து, செப்டம்பர் 15 ஆம் தேதி இரவு வைரமுத்து வேலைக்கு சென்று, வீடு திரும்பும் போது கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விஜயா குடும்பத்தினர் சாதி வெறி ஆணவப் படுகொலை செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதி ஆணவப் படுகொலைகள் தனிச் சிறப்பு சட்டத்தின் இன்றியமையாத் தேவையை வலியுறுத்துகிறது என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

சாதி ஒழிப்புக்கும், சாதிகளற்ற சமூகம் கட்டமைக்கவும் சாதிமறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் சலுகைகளை மறுபரிசீலனை செய்து, வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருவது, சுய தொழிலுக்கு முழு மானிய கடனுதவி செய்வது, வீட்டு மனை நிலம் தருவது போன்றவைகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சிறப்புத் திட்டம் உருவாக்கி செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

ஆணவப் படுகொலைக்கு ஆளான வைரமுத்துவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story