மதுரை: எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது - எடப்பாடி பழனிசாமி

நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது..
புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன். சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,
அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது. இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






