ஒன்றிணைப்பு விவகாரம்: தொண்டர்களின் எண்ணத்தையே பிரதிபலித்தேன் - செங்கோட்டையன்

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் ‘கெடு’ விதித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வந்தது.
இதனிடையே, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் ‘கெடு’ விதித்துள்ளார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனையில் ஈடுபட்டுள்ளார் .
இந்த நிலையில், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரத்தில் தொண்டர்களின் எண்ணத்தையே பிரதிபலித்தேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட , புரட்சித்தலைவி அம்மாவால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்ட, மாபெரும் மக்கள் இயக்கமான அஇஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், இன்னும் நூறாண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற வகையில் பெரும்பான்மையான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து கட்சி ஒன்று பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறேன்.
இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை அறிந்து பல்லாயிரக் கணக்கானோர் வருகை தந்து, எனக்கு பெரும் வரவேற்பை அளித்த அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். நன்றி!!”
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.






