

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பாக, தமிழ் மொழி உணர்வு குறித்தும் மொழிப் போராட்ட வரலாறு குறித்தும் விவரிக்கும் ‘உயிர் நிகர் தமிழ்’ எனும் ஆவண நூலும், அதே பெயரில் மின் நூலகத்தில் மொழிப் போராட்ட ஆவணங்கள், நூல்கள், இதழ்கள், புகைப்படங்கள் ஆகியவை அடங்கிய சிறப்பு இணையப் பக்கமும் (https://tamildigitallibrary.in/tamilpride), உருவாக்கப்பட்டுள்ளன.
பேரறிஞர் அண்ணா நினைவு நாளன்று (பிப்ரவரி 3), தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், தமிழ் இணையக் கல்விக்கழகக் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வில், ‘உயிர் நிகர் தமிழ்‘ நூலை வெளியிட்டு, சிறப்பு இணையப் பக்கத்தையும் திறந்துவைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆவண நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் ரெ.கோமகன் வரவேற்புரையாற்றினார். உள்ளடக்க மேலாண்மைக் குழுவின் தலைவர் ந.செல்லப்பா நன்றியுரையாற்றினார். நூல் உருவாக்கத்தின் ஆலோசகர்களாகப் பங்காற்றிய ஊடகவியலாளர்கள் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ப.திருமாவேலன், ஆழி செந்தில்நாதன், ஆய்வாளர்கள் கரு.ஆறுமுகத்தமிழன், ப.சரவணன், அ.வெண்ணிலா, சங்கர சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் மொழிப் போராட்ட வரலாற்றையும் மொழிப் போர் தியாகங்களை அறிந்துகொள்ளவும், தமிழ் மொழியுணர்வுக்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்ளவும் இந்நூல் பெரிதும் உதவும். மின் நூலகத்தின் சிறப்பு இணையப் பக்கத்தில் பதிவேற்றம் பெற்றுள்ள ஆவணங்கள் நூல்கள் இதழ்கள் முதலியவை இது போன்ற மேலும் பல வரலாற்று படைப்புகளை உருவாக்குவதற்கான சான்றாதாரங்களாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.