முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி சொந்த தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள்

உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலம் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயம் செய்து களத்தில் இறங்கி உள்ளார். திமுக தலைவராக அவர் பொறுப்பேற்றது முதல் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார். எனவே வரும் தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும் என்று தி.மு.க.வினரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
திமுகவும் மற்ற கட்சிகளுக்கு எல்லாம் முன்னோடியாக தேர்தல் பணியில் முதன்மையாக களத்தில் இறங்கி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலம் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதேவேளையில் அரசின் திட்டப்பணிகளையும் தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். அதற்காக துறை ரீதியான ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டங்களில் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதன் செயல்பாடுகள், தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கிறார். அதோடு கண்டிப்புடனும் நடந்து கொள்கிறார். அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காலதாமதம் இருக்க கூடாது என்று 'கறார்' காட்டி வருகிறார்.
இதற்கிடையே மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தொகுதியில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அந்த அடிப்படையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். அதனால் கோட்டைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் வருவதில்லை. கடந்த காலங்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அமைச்சர்கள் சென்னை கோட்டை அலுவலகத்தில்தான் இருப்பார்கள். வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் தொகுதிகளில் இருப்பார்கள்.
ஆனால் இப்போது வார நாட்களிலும் தொகுதிகளில் தான் இருக்கிறார்கள். முதல்-அமைச்சரின் ஆய்வு மற்றும் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தான் சென்னையில் இருக்கிறார்கள். மற்றபடி தொகுதியில் இருந்து அரசின் திட்டப்பணிகளை விரைவுப்படுத்தி வருகிறார்கள். மேலும் மக்களின் குறைகளை கேட்டும், அதனை நிவர்த்தி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.






