

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் 30.1.2026 வெள்ளி 31.1.2026 சனி இரண்டு நாள்களிலும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.
30.1.2026 வெள்ளிக்கிழமை அன்று திருப்பத்தூர் வட்டம் சிராவயல் கிராமத்தில், சுதந்திரப் போராட்ட காலத்தில் உத்தமர் காந்தியடிகள் தோழர் ப.ஜீவாவைச் சந்தித்துப் பேசியதன் நினைவாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில், அங்கு அவர்களின் சிலைகளுடன் கட்டப்பட்டுள்ள நினைவு அரங்கத்தினைத் திறந்து வைக்கிறார்கள். அதனை தொடர்ந்து குன்றக்குடி ஊராட்சியில், நினைவில் வாழும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்.
பின்னர், காரைக்குடி வட்டம், கழனிவாசல் பகுதியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வீறுகவியரசர் முடியரசனாரின் திருவுருவச்சிலையினைத் திறந்து வைத்துச் சிறப்பிக்கிறார்.
மறுநாள் 31.1.2026 சனிக்கிழமை அன்று கானாடுகாத்தான் பேரூராட்சியில் ரூ. 61.78 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ள செட்டிநாடு வேளாண் கல்லூரி, காரைக்குடி வட்டம், கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரி ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் ரூ,13.36 கோடி மதிப்பீட்டிலான 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
ரூ,2,559.50 கோடி மதிப்பீட்டிலான 49 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். 15,453 பயனாளிகளுக்கு ரூ.205.06 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
அதனைத்தொடர்ந்து, காரைக்குடி வட்டம், கழனிவாசல் பகுதியில் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினைத் திறந்து வைத்துப், பார்வையிட்டு’ச் சிறப்பிக்கிறார்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும், பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.