

கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். பங்களாவுக்குள் புகுந்து அந்த கும்பல் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கெடிகாரங்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றையும் கொள்ளையடித்துச் சென்றது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், அவருடைய நண்பர் சயன் உள்பட 11 பேர் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கனகராஜ் விபத்தில் பலியானார். சயன் மற்றொரு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது மனைவி, மகள் விபத்தில் பலியானார்கள்.
இந்த கொலை, கொள்ளை தொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சந்தோஷ்சாமி, திபு, சதீசன், உதயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல கேரளாவை சேர்ந்த ஜிதின்ராய், ஜம்ஷீர் அலி, இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஹவாலா கும்பல் தலைவனான மனோஜ் சாமியார் ஆகியோரும் கைதாகி உள்ளனர்.
சாமியார் சிறையில் அடைப்பு
மனோஜ் சாமியார் தான் கனகராஜ், சயன் ஆகியோருக்கு கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இவர் மீது கேரள மாநிலத்தில் கார் திருட்டு சம்பந்தமான 5 வழக்குகள் மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது. கொலையுண்ட ஓம்பகதூரின் கை, கால்களை கட்டிப்போட்டதும் இவர் தான் என போலீசார் தெரிவித்தனர்.
மனோஜ் சாமியாரை நேற்று தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து, கோத்தகிரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரில் 9 பேர் அடையாளம் தெரிந்தநிலையில் விரைவில் மீதமுள்ள 2 பேரும் சிக்குவார்கள் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
சோதனை நடத்த முடிவு
தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கோவை சரக டி.ஐ.ஜி. தீபக் தாமோர் தலைமையில் நடந்தது.
கூட்டம் முடிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறும்போது, பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு சில பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருட்களை மீட்பதற்காக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். தலைமறைவாக உள்ள 2 பேரையும் பிடிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளோம். விரைவில் அவர்களை பிடித்துவிடுவோம் என்றார்.
சயனிடம் விசாரணை
கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சயனிடம் விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக நேற்று கேரள மாநில போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோவை வந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சயனிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு சென்றார்.
சயனிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கேட்டதற்கு, சயனிடம் விபத்து குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 28-ந் தேதி சயன் தனது மனைவி மற்றும் மகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சூருக்கு திரும்பிக்கொண்டிருந்ததாகவும், சரியான தூக்கம் இல்லாததால் ஆங்காங்கே காரை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்ததாகவும் கூறினார்.
பொள்ளாச்சியில் தூங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து காரை ஓட்டிச் சென்றபோது, திடீரென்று தூங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளார். இப்போது அவருக்கு சரியாக பேச முடியாததால், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம் என்றார்.
மூச்சுத்திணறல்
சயன் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, விபத்தில் பலமாக அடிபட்டதால், சயனின் நுரையீரல் பாதிக்கப்பட்டு உள்ளது. மார்பு எலும்புகளும் உடைந்துள்ளன. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. காரில் உள்ள இரும்புத்தகடு அவர் மீது வேகமாக அழுத்தியதால் வெட்டுக்காயம் போன்று இருக்கிறது. நேற்று அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றார்.