மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் சாவில் மர்மம்: வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால், அந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் சாவில் மர்மம்: வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்
Published on

சென்னை,

முந்தைய அ.தி.மு.க. அரசு மீது இந்த தி.மு.க. அரசு சுமத்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு சாதகமாக செயல்படாத, உடன்படாத, நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

உடன்படாத, பணியிட மாறுதல் செய்ய முடியாத நிலையில் உள்ள அதிகாரிகள் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படுகின்றனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

பணி நீட்டிப்பு பெற வாய்ப்பு

வெங்கடாசலம் அ.தி.மு.க. அரசால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரது பதவி இந்த ஆண்டு செப்டம்பர் வரை இருந்தது. மேலும், சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அவர் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது.

ஆனால், வெங்கடாசலம் முந்தைய அ.தி.மு.க. அரசு மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப, நீங்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என்று தி.மு.க. அரசால் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டது. இவர் ஒருவர் மட்டுமல்ல, இதுபோல் பல அதிகாரிகள் மிரட்டப்பட்டு வருகின்றனர்.

ராஜினாமா செய்ய வற்புறுத்தல்

உண்மைக்கு மாறாக, முந்தைய அ.தி.மு.க. அரசுக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்று உறுதியாக நின்ற அவரை, ராஜினாமா செய்யுங்கள் என்று இந்த தி.மு.க. அரசு கூறியபோது, அவர் ராஜினாமா செய்யமாட்டேன் என்று தைரியமாக கூறியதாக செய்திகள் தெரிவித்தன. இந்த நிலையில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்தி சுமார் ரூ.11 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறியது.

வெங்கடாசலம் சுமார் 35 ஆண்டு காலம் வனத்துறை அதிகாரி என்ற முறையில், மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். அவர் ரூ.2 லட்சத்துக்கு மேல் மாத சம்பளம் பெறுபவர். ஒரு திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த அனைத்திந்திய வனப்பணி மூத்த அதிகாரி இதுபோன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும் வாய்ப்பு இல்லை.

லஞ்ச ஒழிப்புத்துறையின் நோக்கம்

லஞ்ச ஒழிப்புத்துறை பரிசோதனையில், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்கள் பற்றிய விவரங்களை அவரால், துறை விசாரணையின்போது கண்டிப்பாக விளக்கியிருக்க முடியும். ஆனால், விசாரணை என்ற பெயரில் அவரையும், சம்பந்தமே இல்லாத அவருடைய குடும்பத்தினரையும் வரவழைத்து உண்மைக்கு மாறாக சாட்சியம் பெறுவதே லஞ்ச ஒழிப்பு துறையினரின் நோக்கமாக இருந்தது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவேதான், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக செய்திகள், ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியினரான நாங்களும் சந்தேகிக்கின்றோம்.

சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்

வெங்கடாசலத்தினுடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர்.

எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com