

சென்னை,
2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வான வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.
தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. திருச்சி மாவட்டத்தில் உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா தேவாலயம், புனித மரியன்னை பேராலயம், தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் பங்குத் தந்தை அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி தேவாலயத்தில், புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். சென்னையை அடுத்த பரங்கிமலை புனித பேட்ரிக் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை சைலக்ஸ் ஸ்டீபன் தலைமையில் கொரோனா நோயின்றி மக்கள் மகிழ்ச்சியுடன், சகோதரத்துவத்துடன் வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை லியோ மற்றும் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி வியாகுல அன்னை தேவாலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. மின்விளக்கு அலங்காரத்துடன் ஜொலித்த தேவாலயத்தில் அப்பகுதியினர் தங்கள் குடுத்தினத்துடன் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். தேவாலயம் அருகே பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு முதல் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பழமை வாய்ந்த புனித வளனார் தேவாலயத்தில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் உதவி பங்குத்தந்தைகள் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள புனித அன்னை வேலாங்கன்னி ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டின் கடைசி ஆராதனை மற்றும் 2022 ஆம் ஆண்டின் முதல் ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆராதனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அனைவரும் நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை புனித கேத்தரின் தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் புத்தாடைகளை அணிந்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். 12 மணி முதல் 2 மணி வரை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றனர். மேலும் தமிழகமெங்கும் உள்ள தேவாலயங்களில் உலக நன்மைக்காகவும், கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.