புதுடெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட அதிமுக அலுவலகம் இன்று திறப்பு

புதிதாகக் கட்டப்பட்ட புதுடெல்லி கட்சி அலுவலகத்தை காணொளிக் காட்சி மூலம் அதிமுகவினர் இன்று திறந்து வைத்தனர்.
சென்னை,
அதிமுக கட்சிப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி , சென்னை, தலைமைக் கட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (10.2.2025 - திங்கட் கிழமை), ``புதுடெல்லி, எம்.பி. ரோடு, இன்ஸ்டிட்யூஷனல் ஏரியா, புஷ்ப் விஹார், செக்டார் - 6, பிளாட் எண்கள். 15 & 22'' என்ற முகவரியில் புதிதாகக் கட்டப்பட்ட புதுடெல்லி கழக அலுவலகமான ``எம்.ஜி.ஆர். - அம்மா மாளிகை''-யை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தலைமைக் கட்சிச் செயலாளர்கள், மாவட்டக் கட்சிச் செயலாளர்கள், கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
புரட்சித் தலைவி அம்மா அவர்களால், புதுடெல்லி கட்சி அலுவலகம் அமைப்பதற்காக 21.2.2012 அன்று 10,850 சதுர அடி கொண்ட இடம் மத்திய அரசிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. 5.10.2015 அன்று அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13,020 சதுர அடி கொண்ட இக்கட்டிடம் தரைத் தளம், முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என நான்கு தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது.
புதுடெல்லியில், ``எம்.ஜி.ஆர். - அம்மா மாளிகை'' கட்சி அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில், தலைமைக் கட்சிச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதுடெல்லி மாநிலக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






