ஆம்பூர் அருகே ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆம்பூர் அருகே ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை விஜயவாடாவில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால பணிக்காக கொட்டப்பட்டு இருந்த மண் குவியல்கள் மீது ஏறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்சை, கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






