ஆன்லைன் சூதாட்டம்: 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


ஆன்லைன் சூதாட்டம்: 91 பேரை  பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 July 2025 12:00 PM IST (Updated: 14 July 2025 12:00 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் தொடர அனுமதித்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

மதுரை மாவட்டம் சில்லாம்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்து கடனாளி ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சின்னச்சாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த 20 மாதங்களில் 31 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 91 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்துள்ளனர்.

இவ்வளவு பேர் இன்னுயிரை இழந்த பிறகும் கூட இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள மேல்முறையீட்டை விசாரணைக்கு கொண்டு வந்து தடை பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது தி.மு.க அரசு கொண்டுள்ள அக்கறை தான் இதற்கு காரணமா? எனத் தெரியவில்லை.

ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் தொடர அனுமதித்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். அதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story