ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத இலக்குகளை துல்லியமாக தாக்கினோம் - அஜித் தோவல்


ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத இலக்குகளை துல்லியமாக தாக்கினோம் - அஜித் தோவல்
x

பாகிஸ்தானால் இந்தியாவில் ஒரு கண்ணாடியைக்கூட உடைக்க முடியவில்லை என அஜித் தோவல் பேசினார்.

சென்னை,

ஐ.ஐ.டி., சென்னையில் நடந்த 62வது பட்டமளிப்பு விழாவில் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

"நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். இங்கே ' ஆபரேஷன் சிந்தூர்' பற்றியும் குறிப்பிட வேண்டும். இதில், உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பை நினைத்து பெருமையடைய வேண்டும். பாகிஸ்தான் உள்ளே 9 பயங்கரவாத இலக்குகளை தாக்க திட்டமிட்டோம். எல்லைப் பகுதிகளில் அல்ல. ஒரு இடத்தையும் தவறவிடாமல், திட்டமிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கினோம்.

முழு நடவடிக்கையும் 23 நிமிடங்களில் முடிந்தது. இந்தியாவுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதைக் காட்டும் ஒரு புகைப்படம் கூட இல்லை. வெளிநாட்டு ஊடகங்கள், மே 10ம் தேதிக்கு முன்பு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானத் தளங்களின் புகைப்படங்களை காட்டின. பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கும் திறன் நமக்கு உள்ளது. பாகிஸ்தான் அதைச் செய்தது, இதைச் செய்தது என வெளிநாட்டு பத்திரிகைகள் தெரிவித்தன. இந்திய உள்கட்டமைப்புக்கு எந்த சேதம் அல்லது ஏதாவது ஓரு கண்ணாடி உடைந்துள்ளது என ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடிந்ததா?

நமது நாகரிகத்தையும், தேசத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்க, நமது முன்னோர் எவ்வளவு அவமானங்கள், இழப்புகள், சிரமங்களை அனுபவித்தார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. நாடு என்பதும், அரசு என்பதும் வேறு.

இந்தியா ஒரு நாடாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது ஒரு அரசாக புதியதாக இருக்கலாம். இன்னும் 22 ஆண்டுகளில் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறோம். அப்போது நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பீர்கள்."

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story