

சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற பாடல், தமிழக வெற்றிக் கழக பாடல் ஆகியவை பாடப்பட்டன.
அப்போது விஜய்யை வாழ்த்தி ஒரு பாடலை பாடகர் வேல்முருகன் பாடினார். அவர் பாடி முடித்ததும் மேடை ஏறிய விஜய், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர் விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க, "தளபதி.. தளபதி வாழ்க. நம்ம வெற்றிக்கொடி எப்பவுமே வாழ்க" என்ற பாடலை வேல்முருகன் பாடிக்கொண்டே ஆடத் தொடங்கினார். உடனே, உற்சாகமான விஜய்யும் நடனமாடி அசத்தினார்.
இதனிடையே கட்சி மேடையில் விஜய் நடனமாடியது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்யை மக்கள் நடிகராகவே பார்க்கின்றனர் என பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விஜய் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும், அவரை நடிகராகவும், டான்ஸராகவுமே மக்கள் பார்க்கின்றனர். விஜய் தனது எதிரியாக தி.மு.க.வைதான் சொல்கிறார், அ.தி.மு.க.வை அல்ல'' என்று தெரிவித்தார்.