

சென்னை
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், “துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி, சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்” என்று உறுதிமொழி எடுத்தனர். இது தொடர்பாகவும், வருகிற சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்கப் போகிறீர்களா? என்பதையும் குறித்து நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
“எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் என் தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்,” என்றார்.
அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குடும்பத்தினரும், தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதற்கேற்ப அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்?” என்றார்.