பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு?


பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு?
x
தினத்தந்தி 16 Dec 2025 12:41 PM IST (Updated: 16 Dec 2025 1:27 PM IST)
t-max-icont-min-icon

3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

2-ம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரெயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழித்தடத்தில் 3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. அப்போது, இந்திய ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டது.

90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் ஜனவரி மாதம் மெட்ரோ ரெயில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும், அவருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 More update

Next Story