கோவில் பெயரில் இயங்கும் தனியார் இணையதளங்களை முடக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் பெயரில் இயங்கும் தனியார் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கோவில் பெயரில் இயங்கும் தனியார் இணையதளங்களை முடக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தருமபுரம் ஆதீனம் மிகவும் பழமையானது. இந்த ஆதீனத்துக்கு சொந்தமானது, மயிலாடுதுறையில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில். இங்கு சுயம்புமூர்த்தியாக சிவன் அருள்பாலிக்கிறார்.

சதாபிஷேகம், 60-ம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டினர் அதிகளவில் இங்கு வந்து திருமண நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக கோவிலை அணுகும் பலர் தவறுதலாக தனியார் இணையதளத்தை தொடர்பு கொள்கின்றனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கோவில் நிர்வாகம் தரப்பில் குறைந்த தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஏராளமான பக்தர்களிடம் தனியார் இணைய தளங்கள் நடத்துபவர்கள் லட்சக்கணக்கான ரூபாயை வசூலிக்கின்றனர். இதனால் பக்தர்கள் விரக்தியடையும் நிலை உள்ளது.

சம்பந்தப்பட்ட தனியார் இணையதளங்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளித்தும் பலன் இல்லை. எனவே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலின் பெயரில் பணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கோவிலின் பெயரில் செயல்படும் தனியார் இணையதளங்களை முடக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அறநிலையத்துறையின் இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com