கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்: செங்கோட்டையன் கூறியது என்ன?

கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று ‘கெடு’ விதித்து இருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலசோனையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சுழலில், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக செங்கோட்டையனிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதவது;
”தர்மம் தலைக்க வேண்டும் என நினைத்தோம். எம்ஜிஆர். அம்மா வழியில் இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகள் வெளிப்படுத்தினேன். என்னை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள். பொறுப்புகளில் இருந்து வெளியேற்றியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






