வருவாய், நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு


வருவாய், நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு
x
தினத்தந்தி 2 Sept 2025 12:11 PM IST (Updated: 2 Sept 2025 12:47 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு தேர்வாணயங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை,

தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி. செழியன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு முறையாக இல்லாத நிலையில் கூட தமிழ்நாடு அரசு சிறப்பாக அதனை எதிர்கொண்டுள்ளது. நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரட்டை இலக்க அளவில் வளர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தேர்வாணயங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.10.28 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32.23 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

52.07 மில்லியன் டாலர் அளவுக்கு நம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல நெருக்கடிகளை தாண்டி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ள முடியாதவையாக உள்ளது.

வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். 3 லட்சம் பேருக்கு நான் முதல்வன் உள்ளிட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை 9% உயர்ந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவது 98%-ஆக உயர்ந்துள்ளது. ரூ.6,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 235 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விடியல் பயணத்தில் தினசரி சராசரியாக 65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 3,700 புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளன. 2,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 45,000 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.7,658 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. 4,500 விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. 76 சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம். மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story