“புரட்சி தளபதி” - தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த பட்டம்

பெரியார் பிறந்த மண்ணிற்கு விஜய் வருகை தந்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு,
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் , ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளார். இதனிடையே த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிந்து வருகிறது.
இந்நிலையில் பொதுகூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “பெரியார் பிறந்த மண்ணிற்கு விஜய் வருகை தந்துள்ளார். ரூ.500 கோடி வருமானத்தை உதறிவிட்டு, மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். வரலாறு படைக்க பெருந்திரளாக கூட்டம் கூடியுள்ளது.இதற்கு முன் புரட்சித்தலைவரைப் பார்த்தேன். இன்றைக்கு புரட்சி தளபதி விஜய்யை காண்கிறேன்” என்று அவர் கூறினார்.






