9 மணி ஆகியும் திறக்கப்படாத பள்ளி... மாணவர்கள் வெளியே காத்திருக்கும் அவல நிலை


9 மணி ஆகியும் திறக்கப்படாத பள்ளி... மாணவர்கள் வெளியே காத்திருக்கும் அவல நிலை
x
தினத்தந்தி 5 Jun 2025 5:29 AM (Updated: 5 Jun 2025 8:11 AM)
t-max-icont-min-icon

அலட்சியமாக செயல்பட்டு தாமதமாக வந்து பள்ளியை திறந்ததால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

திருப்பத்தூர் ,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், ஏ.கஸ்பா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 468 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஜான்சி சந்திரவதி, மூன்று தற்காலிக ஆசிரியர்கள் உட்பட16 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகள் வழக்கம் போல் 8.30 மணிக்குள்ளாக திறக்கப்பட வேண்டிய நிலையில் நேற்று காலை 9:00 மணிக்கு மேல் ஆகியும் பள்ளி திறக்கப்படாததால் மாணவர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பள்ளிக்கு வெளியில் காத்திருக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு பின் வந்த ஒரே ஒரு ஆசிரியர் எத்திராஜ் என்பவர் மட்டும் பள்ளியை திறந்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் 9. 45 மணிக்குள்ளாக ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே வந்தனர்.

ஆனால் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியில் ஆர்வம் காட்டாமல் அலட்சியமாக செயல்பட்டு தாமதமாக வந்து பள்ளியை திறந்ததால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கல்வியின் வளர்ச்சிக்காக பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 More update

Next Story