தன்மானம்தான் முக்கியம்; காங்கிரஸ்காரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.

காங்கிரஸ் கட்சிக்கு பூத்களில் நிர்வாகிகள் இல்லை என்பதை ஏற்க முடியாது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தன்மானம்தான் முக்கியம்; காங்கிரஸ்காரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.
Published on

மதுரை,

மதுரையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகி கோ.தளபதி, “நாங்கள் இல்லாவிட்டால் ‘இந்தியா’ கூட்டணியே கிடையாது” என்று பேசியது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புத் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ்காரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் நிச்சயமாக கேட்கும். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசியிருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ, காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் இழிவாக பேசுகிறார்களோ அவர்களிடம் எந்தவொரு தயவு தாட்சண்யமும் பார்க்கப் போவதில்லை. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் தன்மானம் மிக முக்கியமானது.

காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வந்தே மாதரம், ஜே என்று சொல்வது மட்டுமல்ல, திருப்பி அடிக்கவும் தெரியும். காங்கிரஸ் குறித்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com