அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.. காலாண்டு தேர்வு வினாத்தாள் கேட்டு ஆசிரியர்கள் மீது தாக்குதல்


அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.. காலாண்டு தேர்வு வினாத்தாள் கேட்டு ஆசிரியர்கள் மீது தாக்குதல்
x

பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய 5 மாணவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்


கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டப்பன்குறிச்சியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பொயனப்பாடி கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் மணிகண்டன் (வயது 24) என்பவர் பி.எட். படித்து வருகிறார். இவர் 3 மாத பயிற்சிக்காக வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு வாரமாக பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் அறைக்கதவு மற்றும் ஜன்னலை தட்டி வினாத்தாள் கேட்டு மணிகண்டனிடம் ரகளையில் ஈடுபட்டனர். ஆனால் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்ததால் மாணவர்களை அவர் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் வகுப்பறைக்குள் புகுந்து பயிற்சி ஆசிரியர் மணிகண்டனை தாக்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வகுப்பறையில் இருந்த மற்றொரு பயிற்சி ஆசிரியை மே.மாத்தூர் கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா மகள் ஸ்ரீநிதி (22) ஓடிச்சென்று அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் இவரையும் மாணவர்கள் தாக்கினர்.

தகவல் அறிந்து வந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவா்களை தடுத்து நிறுத்தி வகுப்புக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய 5 மாணவர்களையும் பிடித்து வேப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story