சிவகங்கை: அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்


சிவகங்கை:  அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்
x

சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் புகைப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து இன்று அஞ்சலி செலுத்தினார்.

சிவகங்கை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை சந்திப்போம் தமிழகத்தை காப்போம்" என்னும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வடமாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மக்களை சந்தித்த அவர், நேற்று முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மக்களை சந்தித்து நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகின்றன. தி.மு.க. கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வின் அனைத்து ஊழல்கள் மீதும் விசாரணை நடத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அ.தி.மு.க. சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்ததால் தான் 1,000 ரூபாய் உரிமை தொகையை தி.மு.க. கொடுத்தது. தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய தி.மு.க.வினர் தற்போது வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். குப்பைக்கு கூட வரி உயர்த்தியுள்ளனர்.

பெரிய பெரிய தொழிற்சாலைகள் வெளி மாநிலத்திற்கு செல்வது பற்றி தி.மு.க. அரசு கவலைப்படுவதில்லை. கொள்ளையடிப்பதில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. தமிழக முதல்-அமைச்சர் பொம்மை முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். டாஸ்மாக்கின் மூலமாக 45 கோடி லஞ்ச பணம் மேலிடத்திற்கு செல்கிறது என்று பேசினார்.

இந்நிலையில், சிவகங்கை மடப்புரம் காளி அம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். அஜித்குமாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஜித்தின் தாயார் மற்றும் அவருடைய சகோதரர் நவீன் குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கீழடி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

1 More update

Next Story