

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி ஆஸ்பத்திரியின் 4வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சையின் காரணமாக கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் பார்த்தார். அவர் பார்த்தபோது எடுத்த படம் வெளியிடப்பட்டுள்ளது. அருகில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், ராஜாத்தியம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சபாநாயகர் தனபால் வந்தார். இதனை அடுத்து காவேரி மருத்துவமனைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக., தலைவரும் எனது நண்பருமான கருணாநிதி விரைவில் குணமடைந்து வருவார். இது எனது விருப்பம் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பமும் இதுதான். அனைவரின் ஆசையும் நிறைவேறும். என்று கூறினார்.