யாழ்ப்பாணம்: புதைகுழியில் இருந்த மனித எலும்புக்கூடுகள் - தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையா..?

இலங்கை யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து 200-க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன.
கொழும்பு,
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த உள்நாட்டுப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரும் இனப்படுகொலையே நடந்தது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் மிகப்பெரிய புதைகுழிகளில் கூட்டாக சேர்த்து புதைக்கப்பட்டு உள்ளனர். மனித குலத்துக்கு எதிரான இந்த சம்பவங்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் செம்மணி என்ற இடத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வளர்ச்சிப்பணி ஒன்றுக்காக தோண்டப்பட்டபோது ஏராளமான மனித எலும்புக்கூடுகள் சிக்கின. இதுகுறித்த வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் கோர்ட்டு, சம்பவ இடத்தில் சட்டப்பூர்வ மேற்பார்வையின் கீழ் அகழாய்வு நடத்த கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. அதன்படி அங்கே தொடர்ந்து தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் பெரும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன. ஒருபுறம் தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள் சிக்கி வரும் நிலையில், மறுபுறம் அவற்றில் 90 சதவீதத்துக்கு மேலான எலும்புக்கூடுகள் ஆடையின்றியும், மேலோட்டமாகவும் இருந்தன. மேலும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கியது போல புதைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் அவர்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.
சில மாதங்களாக நடந்து வரும் இந்த தோண்டும் பணியில் இதுவரை 200-க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. உள்நாட்டுப்போர் உச்சியில் இருந்த 1998-ம் ஆண்டில் செம்மணியில் ஓரிடத்தில் இருந்து 15 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தற்போதுதான் இவ்வளவு அதிக எலும்புக்கூடுகள் அங்கே சிக்கி வருகின்றன.
மிகப்பெரிய மனித புதை குழியில் இருந்து 200-க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. சம்பவ இடத்தில் கடந்த மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளில் இலங்கை மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அங்கே சிக்கியுள்ள எலும்புக்கூடுகள் அனைத்தும் சட்ட விரோத மற்றும் நீதிக்கு புறம்பாக கொலை செய்யப்பட்டவர்களுக்கு உரியதாக இருக்கக்கூடும் என மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. மேலும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரசாரம் மற்றும் போர் குற்றங்களின் தெளிவான ஆதாரம் இது என இலங்கை தமிழர் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி கூறியுள்ளது.
இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்களை நீதிக்கு முன்பு நிறுத்த வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் எழுந்து வருகின்றன. யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் அனுர குமார திசநாயகா, இந்த மனித புதை குழி தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.






