உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 11,045 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு - கலெக்டர் தகவல்


உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்:  11,045 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு - கலெக்டர் தகவல்
x

மாவட்டம் முழுவதும் 107 இடங்களில் நடந்த திட்ட முகாம்களில் 11,045 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் 255 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு கிராமங்கள்தோறும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வருகிற 7.10.2025 அன்று வரை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி நேற்று நெல்லை மாநகரம் தச்சநல்லூர் மண்டலம் 12-வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சுகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

இதில் உடனடியாக தீர்வு காணும் வகையில் ரேஷன் கார்ட்டில் பெயர் மாற்றம் செய்தல், பெயர் சேர்த்தல், மினிவினியோகம் பெயர் மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு முகாமிலேயே தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘‘இதுவரை நெல்லை மாவட்டத்தில் நடந்த 107 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 27 ஆயிரத்து 623 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 11,045 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு உள்ளது. மீதி மனுக்கள் பரிசீலனையில் உள்ளன’’ என்று கலெக்டர் தெரிவித்தார்.

1 More update

Next Story