

சென்னை,
தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2 தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மையம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக காரணம் சொல்லப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரவோடு இரவாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றப்பட்டார். புதிதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட பிரியா தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பி.எட், எம்.எட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் வரும் 11-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பி.எட்., எம்.எட். படிப்புக்கான முதல் மற்றும் 3-ம் பருவ தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.
தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இடைவெளி இருக்கும் நிலையில், நேற்று பி.எட்., எம்.எட். தேர்வுக்கான ஹால் டிக்கெட் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாணவ மற்றும் மாணவிகள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முற்பட்டனர். ஆனால், முடியவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, சர்வர் மெதுவாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.
ஆனால், தற்போது வரை சர்வர் சரியாகாததால், மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தேர்வுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருப்பதால், முறையாக தேர்வு நடக்குமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.