

பழனி,
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிலையில் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு முருகனை தரிசிக்க நேற்று பழனிக்கு பாத யாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர். குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. சரண கோஷம் எழுப்பியும், பாட்டு பாடியும் வந்தனர்.
பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கிரிவீதியில் நிழற்பந்தல் அமைத்து அதன் வழியாக மலைக்கோவில் செல்ல பாதை ஏற்படுத்தப்பட்டது. 16 இடங்களில் பக்தர்களை நிறுத்தி வைத்து பகுதி, பகுதியாக அனுப்பப்பட்டனர். இதனால் தரிசனத்துக்கு சுமார் 4 முதல் 5 மணி நேரம் எடுத்து கொண்டாலும் பக்தர்கள் நெரிசல் இன்றி சென்று வந்தனர். நேற்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து கிரிவலம் சென்றனர்.
பெண்கள் பால் காவடி எடுத்தும், சிறுவர்கள் மேள தாளத்துக்கு ஏற்ப மயில் காவடியில் ஆடிப்பாடியும் கிரிவலம் வந்தனர். பழனி தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். எனவே பழனிக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக திருச்சி, திண்டுக்கல், தேனி, கோவை, ஈரோடு, மதுரை என அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பழனியாண்டவர் கல்லூரி, கொடைக்கானல் ரோடு ஆகிய இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழனியில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு அதில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று தைப்பூசம் என்பதால் சாமி தரிசனம் செய்ய பழனியில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதேபோல தைப்பூசம் திருவிழாவை ஒட்டி முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் சென்னை வடபழனி உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.