

கோவை,
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
மகா சிவராத்திரி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விழாவிற்கு அறிவியல் அறிஞர்கள் பல்வேறு விளக்கத்தை தந்துள்ளனர். நம் உடலில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது. அதுபோல உலகத்தில் தண்ணீர் தான் அதிக அளவில் இருக்கிறது.
நமது உடலில் ஏற்படும் உணர்வுகள் உள்ளிட்ட அனைத்தும் இந்த தண்ணீர் மூலம் தான் சரி செய்யப்படுகிறது. தனித்துவமாக ஒரு காரியத்தை செய்யும்போது பல்வேறு பிரச்சினைகள் தேடிவரும். அப்போது நம்மால் நிலை நிற்க முடியாது. யோகா மூலம் தான் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.
ஆதியோகி தான் எதிர்காலம். எதிர்கால சந்ததி, தொழில்நுட்பத்தை தான் நம்புகிறது. தொழில்நுட்பம் சிறந்ததாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் நமக்கு நடக்கும் செயல்கள் நம் கர்மாவை பொறுத்து அமைகிறது.
எந்த ஒரு விஷயமும் நமக்கு உதவும் அல்லது கெடுக்கும் என்பது குறித்து யோசிக்ககூடாது. வாழ்க்கையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாம் அனைவரும் வல்லரசு இந்தியாவை நோக்கி பயணிக்கிறோம். இந்த நாட்டை எதிர்கால சந்ததிக்கு சிறந்ததாக கொடுக்க வேண்டும்.
யாரையும் அதிகாரம் செய்யும் நாட்டை உருவாக்க வேண்டியது இல்லை. அனைவருடனும் நட்பு பாராட்டும் ஒரு நாட்டை தான் உருவாக்க வேண்டும். உடல், நலம், ஆன்மிகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கும் நாட்டையே உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.