17 சதவீதம் மட்டுமே பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மத்திய அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


17 சதவீதம் மட்டுமே பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மத்திய அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x

பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடபெற்றது. இதில் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காலநிலை தொடர்பாக மாவட்ட அளவில் நடத்தப்படும் ஒருநாள் முகாம், இனி 2 நாட்கள் நடத்தப்படும். பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நமது அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாக பார்த்திருக்கிறோம்; அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டித்வா புயல் பாதிப்பில் இருந்து தமிழகத்தை பாதுகாத்துள்ளோம்; மிக விரைவில் காலநிலை கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் நெரிசலைக் குறைக்க சிறந்த வழி. அதை ஊக்குவிக்கதான் 120 மின்சாரப் பேருந்துகளை கொண்டு வந்துள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளோம். இதனால் நெரிசலும், மாசுவும் குறையும்.

கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17% நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது. அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story