

சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் கடந்த 22 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த 2003-ம் ஆண்டில் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் ஒப்பந்தப் பணியாளர்களாக, பணி நியமனம் செய்யப்பட்டனர். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என்ற வகையில், பாதுகாப்பு வைப்புநிதி செலுத்தி பணி நியமனம் பெற்றுள்ளனர். பாதுகாப்பற்ற பணிச்சூழல் காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முறையிட்டும், போராடியும் வருகின்றனர்.
சில்லறை மதுபான விற்பனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்களிப்பு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) கடந்த 2025 பிப்ரவரி 11 முதல் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த கால கட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், அரசின் கூடுதல் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படாத நிலையில் நாளை (03.02.2026) முதல் காலவரையற்ற காத்திருப்பு இயக்கத்தை அறிவித்துள்ளனர். வேறு சில தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நீண்ட கால பணித்தொடர்ச்சியுடன் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மிக, மிக நியாயமானவை என்பதை முதல்-அமைச்சர் கவனத்துக்கு தெரிவித்து டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகள் மீது நேரடியாக தலையிட்டு நிறைவேற்றித் தருமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.