கணினி உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றிய குற்றப்பிரிவு போலீசார்

குளச்சல் அருகே உடையார்விளை மோசடி நிதி நிறுவனத்தில் இருந்து கணினி உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
கணினி உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றிய குற்றப்பிரிவு போலீசார்
Published on

குளச்சல்:

குளச்சல் அருகே உடையார்விளை மோசடி நிதி நிறுவனத்தில் இருந்து கணினி உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

மோசடி நிதி நிறுவனம்

குமரி மாவட்டத்தில் உடையார்விளை, வேர்கிளம்பி, களியல், அழகியமண்டபம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு வேலைக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் தலைமை அலுவலகம் கரூர் என விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நிறுவனத்தில் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் தொகைக்கு ஏற்ப ரூ.25ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலுத்தினர். 4 கிளைகளிலும் சுமார் 3 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த 14-ந்தேதி அழகியமண்டபம் பகுதியில் கடன் வழங்கும் விழா நடைபெறும் என அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் நிறுவன உறுப்பினர்கள் திடீரென மாயமானார்கள். அவர்கள் பணத்தை பெற்று மோசடி செய்து தப்பிச் சென்றனர்.

6 பேர் மீது வழக்கு

இதனால் பணம் சலுத்தி ஏமாற்றப்பட்ட மக்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன இயக்குனர்கள் என கூறிய தூத்துக்குடியை சேர்ந்த சியாம் ஜோஸ்வா, தூர்கா தேவி, சிவகங்கையை சேர்ந்த வேணுகோபால், திருநெல்வேலியை சேர்ந்த அல்தாப், கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ், பாளையங்கோட்டையை சேர்ந்த ஜமால் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஆவணங்களை கைப்பற்றினர்

இந்தநிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் போலீசார் நேற்று குளச்சல் அருகே உடையார்விளை உள்ள மோசடி நிதி நிறுவன அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர், போலீசார் அந்த அலுவலகத்தை திறந்து அங்கிருந்த கணினி மற்றும் பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதுபோல் களியல் உள்ளிட்ட இடங்களில் உள்ள கிளைகளில் இருந்த ஆவணங்களையும் எடுத்து சென்றனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். போலீசார் ஆவனங்களை எடுத்துச் சென்றதும் பொதுமக்கள் கலைந்து சென்றன.

அப்போது, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா கூறுகையில், போலி நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் ஏமாறக்கூடாது. கவர்ச்சி திட்டங்கள், போலி அறிவிப்புகள் பற்றி தீவிரமாக விசாரித்த பின்பே அதில் சேர வேண்டும். மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றார்.

அலுவலக பொருட்களில்...

உடையார்விளை கிளையில் அலுவலகத்திற்கு தேவையான ஜெராக்ஸ் எந்திரம், இன்வெட்டர்கள், மின் விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை கடனுக்கு வாங்கி உள்ளனர். தலைமை அலுவலகத்திலிருந்து பணம் வந்ததும் தந்து விடுவோம் என ஏமாற்றி வாங்கி உள்ளனர். பொருட்களை கடன் கொடுத்தவர்களும் தினமும் வந்து அலுவலகம் பூட்டி கிடப்பதை கண்டு சோகத்துடன் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com