கள்ளக்காதல் மோகம்...வாலிபரின் உயிரை பறித்த சோகம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்


கள்ளக்காதல் மோகம்...வாலிபரின் உயிரை பறித்த சோகம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 12 Oct 2025 10:49 AM IST (Updated: 12 Oct 2025 11:58 AM IST)
t-max-icont-min-icon

கல்யாணம் முடிந்தும் அடங்காமல் பெண்மீது கொண்ட கள்ளக்காதல் மோகம் வாலிபரின் உயிரை பறித்தது.

கோயம்புத்தூர்

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது24). இவர் சூலூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் சந்தோசுக்கு திருமணத்திற்கு முன்பு தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது.

ஆனால் இவர்கள் 2 பேருக்கும் ஜாதகம் பொருந்தாததால் சந்தோஷின் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். கண்ணம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவரை தேவி திருமணம் செய்து கொண்டு சூலூர் கரடிவாவியில் வசித்து வந்தார். இந்தநிலையில் சந்தோஷ், திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு தேவியுடன் நட்பை தொடர்ந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி வந்தனர். தேவியின் கணவரான ரவிச்சந்திரனுக்கு இது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சந்தோசை சந்தித்து, தனது மனைவியுடனான பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் 2 பேரும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசி வந்தனர். இது ரவிச்சந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை தீர்த்து கட்டுவது என்று முடிவு செய்தார். சந்தோஷ் இரவில் வழக்கம்போல் பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தார். அப்போது ரவிச்சந்திரன், தனது உறவினரான நவீன் என்பவருடன் வந்து சந்தோஷிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதில் 2 பேருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோசின் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. மேலும் இரும்பு கம்பியாலும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சூலூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை தொடர்பாக பெட்ரோல் பங்கில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், நவீன் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் சூலூர் பகுதியில் பதுங்கியிருந்த ரவிச்சந்திரன், நவீனை போலீசார் கைது செய்தனர்.

கைதான ரவிச்சந்திரன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “எனது மனைவியுடன் சந்தோஷ் திருமணத்துக்கு பின்னரும் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த 30-ந் தேதி என்னுடைய மனைவி திடீரென மாயமாகி விட்டார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. எனது மனைவியை சந்தோஷ் கூட்டி சென்றதும், 4 நாட்கள் கழித்து திரும்ப கொண்டு வந்து விட்டதும் தெரியவந்தது. இதனால் எனக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். எனது குடும்பம் பிரிவதற்கு சந்தோஷ் தான் காரணம் என அவரை தீர்த்து கட்டினேன்” என்று அவர் கூறி உள்ளார்.

1 More update

Next Story