

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், கலைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலை நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில், பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மழைக்காலம் மற்றும் இதர நாட்களில் தொடர்ந்து அலுவலகப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு மனநிறைவை அளித்திடும் வகையிலும், புத்துணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தெரிந்திடும் வகையிலும் மாநகராட்சி கலை விழா இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு கலைஞர்களின் நாட்டுப்புறப் பாடல், பறை இசை, மல்லர் கம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் (கல்வி) க.கற்பகம், நிலைக்குழுத் தலைவர்கள் த.விசுவநாதன் (கல்வி), கோ.சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), தா.இளைய அருணா (நகரமைப்பு), சர்பஜெயதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு (ம) நிதி), மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.