ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் விலை 2 ஆயிரத்து 545 ரூபாயாக உயர்வு - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு


ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் விலை 2 ஆயிரத்து 545 ரூபாயாக உயர்வு - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
x

செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதல் தொடங்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 1-ந்தேதி முதல் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 545 மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 500 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய ஆணையிட்டுள்ளார். இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றிற்கு சன்னரகத்திற்கு ரூ.156-ம் பொதுரகத்திற்கு ரூ.131-ம் வழங்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லிற்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்குவோம் என்று குறிப்பிட்டதை நிறைவேற்றியுள்ளோம் என்பதைத் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் இதுவரை 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 777.83 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ.2 ஆயிரத்து 31.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2022-2023-ம் ஆண்டு முதல் செப்டம்பரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருவதுபோல் இந்த ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து கொள்முதல் செய்யப்படும். ரூ.333 கோடியே 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 4 லட்சத்து 3 ஆயிரத்து 350 டன் கொள்ளளவு கொண்ட 26 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இந்த ஆண்டு நெல்வரத்து அதிகமாக வரலாறு காணாத வகையில் இருந்தாலும் எதிர்பாராது அடிக்கடி மழை பெய்தபோதும் நெல்மணிகள் மழையில் நனையாமல் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று வருகின்ற 2025-26 பருவத்தில் நெல் கொள்முதலைச் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து தொடங்கிட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் விரைந்து திறந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் மையங்களில் இருந்து நேரடியாக அரிசி அரவை ஆலைகளுக்கு நெல்லை அனுப்பிடவும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து நெல் விவசாயிகளும் புதிய விலையில் நெல்லினை விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story