அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை: சி.வி.சண்முகம்


அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை: சி.வி.சண்முகம்
x

அதிமுக எக்கு கோட்டையாக இன்று இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என சிவி சண்முகம் பேசினார்.

சென்னை,

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் பேசுகையில், "இந்த அரங்கத்தில் தான் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம். நம்மை யாரும் தோற்கடிக்க முடியாது. 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கும் இயக்கம் அதிமுக. அதிமுகவில் சலசலப்பு என சிலர் உண்மைக்கு புறம்பாக கூறி வருகின்றனர். எங்கள் கூட்டத்தை பாருங்கள். எங்கே இங்கு கருத்து வேறுபாடு உள்ளது? எங்கே இங்கு சலசலப்பு? ஒற்றுமை தான் அதிமுகவின் பலம். நூறு கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. 2026ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்.

பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் உளவியல் ரீதியாக நம்மை பலவீனப்படுத்த பார்க்கின்றன. அதிமுக யாரை நம்பியும் இல்லை. தொண்டர்களின் ஒற்றுமையே அதிமுகவின் பலம்.அதிமுக எனும் இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக துரோகிகளால் பல இன்னல்களை சந்தித்துள்ளது. அனைத்தையும் முறியடித்தவர் எடப்பாடியார். அதிமுக எக்கு கோட்டையாக இன்று இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம். அதிமுகவை அழித்துவிடலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார்' என்றார்.

1 More update

Next Story