ஐகோர்ட்டு அருகே பரபரப்பு.. திருமாவளவன் சென்ற கார் பைக் மீது உரசியதால் பரபரப்பு

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர்,
டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர், திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னாள் வக்கீல் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது திருமாவளவன் வந்த கார் திடீரென மோதி உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வக்கீல் கார் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் அந்த பைக்கில் சென்ற வக்கீலை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீலான ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பைக் ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.






