திருப்பரங்குன்றம் வழக்கு: கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்

உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை என மதுரை கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கு: கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்
Published on

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தை விட்டு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த டிசம்பர் 1-ந்தேதி உத்தரவிட்டார்.

ஆனால், டிசம்பர் 3-ந்தேதி கார்த்திகை தீபத்திருந்தாள் தினத்தன்று, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து மனுதாரர் மதுரை கலெக்டர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி மீதான விமர்சனங்களும், அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்தன.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், சட்ட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது, ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதற்கு உரிய பதிலை சொல்லியே ஆக வேண்டும்’ என்று இருவரிடமும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கூறினார்.

இந்நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இன்றைய விசாரணையின்போது மதுரை கலெக்டர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் கலெக்டர் பிரவீன் குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், “மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் வந்ததால், விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக அப்போதைய சூழலை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சூழல் கடினமாக இருந்தது. சுமார் 1,500 பேர் மலையேற முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ள மதுரை கலெக்டர் பிரவீன் குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மதுரை காவல் ஆணையர் தரப்பிலும் இதே விவரங்கள் அடங்கிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டக் கூடாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மதுரை கலெக்டர், காவல் ஆணையர் ஆகியோர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com