திருவண்ணாமலை: இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் - மு.க.ஸ்டாலின் நிவாரணம்
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து வரும் முனியன் த/பெ.முனுசாமி என்பவர் இன்று (13.02.2026) காலை 7.00 மணியளவில் புதிய வீடு கட்டுவதற்காக தனது பழைய தொகுப்பு வீட்டினை இடிக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி வந்தவதாசி வட்டம், வழுர் கிராமத்தைச் சேர்ந்த மேற்படி முனியன் என்பவரின் மகள் வழி பேரன்கள். அபினேஷ் (வயது 16) த/பெ.மோகன் மற்றும் முகேஷ் (வயது 14) த/பெ.மோகன் ஆகிய இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (வயது 8) த/பெ. சீதாராமன் என்ற சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

