குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. பின்னர் மழைப்பொழிவு குறைந்ததால் அருவிகளில் மிதமான நீர்வரத்து உள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் விழும் மிதமான தண்ணீரில் ஏராளமானவர்கள் ஆனந்தமாக குளித்தனர்.
ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் மிதமான தண்ணீர் விழுகிறது. அங்கும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்று குளித்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் அருவி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு ஒலிப்பெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் அவ்வப்போது தள்ளுமுள்ளு ஏற்படுவதாகவும், அதற்கு அப்பகுதியில் உள்ள தரை சேதமடைந்து காணப்படுவதே காரணம் எனவும், எனவே அதை சரி செய்ய வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.






