மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

கலை நிகழ்ச்சிகளில் 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்ற (08.02.2026) நடைபெற்ற கலைவிழாவில் தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளில் மக்களின் வசதிக்காகவும், சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்திடும் வகையிலும், பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மெரினா கடற்கரையில், மெரினா நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதியில் உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த நீலக்கொடி கடற்கரைப் பகுதிக்கு, மக்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில், இங்கு வரும் மக்களின் மகிழ்விற்காகவும், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், இந்த கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் கலைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் 21.09.2025 முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடத்தப்படுகிறது.

இதன் தொடச்சியாக, இன்று (08.02.2026) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சியில், சென்னை மிருது கலசமதி கலைக்குழுவினரின் செண்டை மேளம், சென்னை நிர்த்யாலா நாட்டியப்பள்ளி கலைக்குழுவினரின் பல் சுவை நடன நிகழ்ச்சிகளும், திருச்சி பிரபாகரன் கலைக்குழுவினரின் இசை வாத்தியமும், திருப்பத்தூர் பெள்ளிகுல பண்பாட்டு மையம் கலைக்குழுவினரின் குருமன்ஸ் சேவையாட்டமும், பஞ்சாபி பங்க்ரா டோல், பீட் பாக்ஸிங் மற்றும் கானா பாடல்களும் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சிகளில் 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இன்று (08.02.2026) மாலை 5.30 மணி முதல் மூன்று மணி நேரம் மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சியினை நேரடியாக ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com