

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் வடிகால் பராமரிப்பு, சுகாதாரம் & பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டல அலுவலகக் கூட்டரங்கில் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மைத் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் நிறுவன வலுப்படுத்தல் மற்றும் சீர்திருத்த ஆலோசகர் (ISRC) இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் வடிகால் பராமரிப்பு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பயிற்சியினை இன்று (05.02.2026) வழங்கினர்.
இப்பயிற்சி முகாமில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது. அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் காட்சி விளக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், மழைநீர் வடிகால் பராமரிப்பை பாதுகாப்பாகவும் முறையான மற்றும் சுகாதாரமான முறையிலும் மேற்கொள்ள உதவும் களவழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியின்போது, மழைநீர் வடிகால் பராமரிப்பு நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள், பணியிடங்களில் ஏற்படும் பொதுவான ஆபத்துகள், பாதுகாப்பு நடைமுறைகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) பயன்படுத்துவதின் அவசியம், முதலுதவி மற்றும் அவசர கால நடவடிக்கைகள், உடல் நல பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், இப்பயிற்சியில் வெள்ளநீர் வடிகால் பராமரிப்பு, கழிவுகளை முறையாக அகற்றுதல், பராமரிப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை சரியாக பயன்படுத்துதல், பணியிடங்களில் முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்த பயிற்சி, பணியாளர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி, பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதோடு, மழைநீர் வடிகால் மேலாண்மையை வலுப்படுத்தி, சென்னை நகரின் நகர்ப்புற வெள்ளத்தடுப்புத் திறனை அதிகரிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.